×

மருத்துவமனைகளிலேயே உள்ள அவலம் மனநல பாதிப்பு குணமான பிறகும் வீடு திரும்ப முடியாமல் 2,000 பேர் பரிதவிப்பு: தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதுமுள்ள மனநல மருத்துவமனைகளில் குணமடைந்தோர் 2,000க்கும் மேற்பட்டோர் உள்ளதாக தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் மிஸ்ரா வேதனை தெரிவித்துள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் மனநலம் குறித்த தேசிய மாநாட்டை ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான அருண் குமார் மிஸ்ரா கலந்து கொண்டு பேசினார். அப்போது, “தேசிய மனித உரிமை ஆணையம் குவாலியர், ஆக்ரா மற்றும் ராஞ்சி உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள 47 மனநல பராமரிப்பு நிறுவனங்கள், மருத்துவமனைகளை ஆய்வு செய்தது.

2022 ஜூலை முதல் 2023 ஜனவரி வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளின் அறிக்கைகளின்படி நாடு முழுவதும் உள்ள மனநல மருத்துவமனைகளில் குணமடைந்த 2,000க்கும் மேற்பட்டோர் இன்னும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் வீடு திரும்ப முடியவில்லை. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மேற்குவங்கத்தில் உள்ள மனநல மருத்துவமனைகளில் உள்ளனர். இது நீதியின் கேலிக் கூத்து. மருத்துவமனை என்பது குணம் அடைந்தவர்கள் இருப்பதற்கான இடமல்ல” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பத்தில் ஒருவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பல்வேறு வகையான மனநோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மனநல பாதிப்பை சரி செய்ய கல்வி, சுகாதாரம், பொதுக்கொள்கை, சமூக ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான அணுகுமுறை தேவை. மனநோயை சரி செய்ய புரிதல் மற்றும் இரக்கத்தை வளர்க்கும் உரையாடல்களை ஊக்குவிக்க வேண்டும்” என்று கூறினார்.

* மனநோயை தடுக்க போர்க்கால அடிப்படையில் அரசு செயல்படுகிறது
நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய அமைச்சர் பாரதி பிரவீன் பவார், “மனநலம் என்பது நம் ஆரோக்கியத்தின் முக்கிய அம்சம். ஏனெனில் மனநலம் பாதிக்கப்பட்டால் மற்ற அனைத்தும் பாதிக்கப்படும். மனநல பிரச்னையை பொது சுகாதார பிரச்னையாக கருதி அதனை சரி செய்வதில் அரசு வேகமாக செயல்படுகிறது. மனநோயை சரி செய்ய மருத்துவர்கள் மற்றும் பிற நிபுணர்களுக்கு சிறந்த பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இது வரலாற்று சிறப்புமிக்க மனநல சுகாதார சட்டம் 2017 நிறைவேற்றப்பட்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

The post மருத்துவமனைகளிலேயே உள்ள அவலம் மனநல பாதிப்பு குணமான பிறகும் வீடு திரும்ப முடியாமல் 2,000 பேர் பரிதவிப்பு: தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Alam ,National Human Rights Commission ,New Delhi ,Misra ,
× RELATED ஜார்க்கண்ட் அமைச்சருக்கு ஈடி சம்மன்